Books

பயணம் திறந்த இதயம்
  புத்தக அறிமுகம்   பயணம் திறந்த இதயம்
  முதற்பதிப்பு   ஏப்ரல் 2019
  விலை   ரூ. 155
  வெளியீடு   நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
  மொத்த பக்கங்கள்    174

 

இந்திய ஆட்சிப் பணியில் திறம்பட பணியாற்றி வரும் ஆசிரியர், தலைசிறந்த பயிற்சி மையமான மசூரி LBSNAA வில் இந்திய ஆட்சிப்பணியின் நான்காவது கட்ட பயிற்சியில் நண்பர் ஸ்வரூப் அவர்களுடன் கலந்துகொண்ட பொழுது நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்களை நகைச்சுவை உணர்வோடு சிறப்பாக படைத்தளித்திருக்கிறார். சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயங்கள் பல உள்ளன இப்புத்தகத்தில்.

பயிற்சிக்கான பயணம் தொடங்குகையில் டெல்லி விமான நிலையத்தில் நண்பரை காணாமல் தவிக்கும் ஆசிரியர் தன் நண்பரை சந்தித்தாரா இல்லையா என்று முதல் அத்தியாயமே சுவாரஸ்யத்துடன் தொடங்கும் நியூயார்க் விமானத்திற்கு போர்டிங்க் பாஸ் வாங்குகையில் DNB என வந்தது ஏன், விமானப் பயணத்தில் ஏற்பட்ட இடர்பாடுகளை தாண்டி கோவையின் சின்ன வதம்பச்சேரியில் பிறந்த ஆசிரியர் நியூயார்க்கில் பறக்கும் நம் தேசிய மணிக்கொடியை கண்டு மகிழ்ந்தாரா, நயாகராவில் நனைந்தாரா, நியூயார்க் ஹோட்டலில் ஆசிரியருக்கு ஏன் எலிகாப்டர் கொடுக்க நினைத்தார்கள் என்பன போன்ற பல கேள்விகளுக்கு சுவையான பதில்கள் உள்ளன.

இப்புத்தகத்தின் வழியே பயணிக்கையில் ஆசிரியரோடு சேர்ந்து நாமும் மசூரியின் அழகை இரசித்து, மனதையும் உடலையும் கட்டுக்குள் வைத்திருக்கும் விந்தையை கற்றுக்கொள்கிறோம். எதற்காக நாம் வேண்டும் என்ற கேள்வியோடு சமூகத்தின் நலனுக்காக சிறப்பான பணிகள் ஆற்றிக்கொண்டிருக்கும் சிறந்த மனிதர் சோனம் வாங்சுக்! பெயிலான மாணவர்களுக்காகவே அவர் நடத்தும் சிறப்பு பள்ளி இன்னும் அவரைப்பற்றி பல சுவையான தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளன.

அரங்கினில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் சலிக்காமல் பதிலளித்து பெண்களின் மதிப்பை உயர வைத்த ஹாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், அரங்கையே அதிர வைத்த ஒரு கேள்வியை கேட்ட சிறப்பான மனிதர், தொப்பையைக் குறைக்க ஒரு எளிய உடற்பயிற்சி – SLR, செல்லிடத்  தொலைபேசியை பயன்படுத்தாத இரண்டு மாமனிதர்கள், இணையதள விரதம் என்றால் என்ன?, தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
 ராணா சாரின் உடற்பயிற்சி வகுப்புகள், உள்ளத்தை படித்து உண்மையை சொல்லும் கணிணி, ஒரு இரப்பர் பேண்ட்டை வைத்து உளவியல் தத்துவத்தை தெளிவாக புரிய வைத்த வட சென்னை வாத்தி, தலையை தானமாக கொடுத்த மகாபாரத கதாபாத்திரம் பார்பரிக், குதிரை பறந்த கதை, முட்டை வித்த மெக்ஸிகோ விவசாயி கதை, எலியால் வந்த சோதனை, Ice Breaking Session – ல் பகிர்ந்து கொண்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் வியக்க வைக்கும் கிறுக்குத்தனங்கள். மேலும் இந்திய பொருளாதாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள உதவும் டோநாட் எக்கனாமிக்ஸை வடையனாமிக்ஸ் என்று சுவைபட விவரித்திருக்கிறார் ஆசிரியர்.
அமெரிக்காவிலிருந்து ஆசிரியர் அவரது மனைவியின் பிறந்தநாளுக்காக பரிசளித்த படிக்கும்போதே மனதில் நேச மணம் வீசும் அற்புதக் கவிதை "அமெரிக்க மல்லிகைப்பூ".
 இதிகாசங்கள், இலக்கியங்கள், இன்றைய சினிமா, சிறந்த புத்தகங்கள், ஆசிரியர்கள் மற்றும் உற்ற நண்பர்கள் போன்ற பல்வேறு விஷயங்களை தொடர்ச்சியாக எழுதாமல் சுவை கூட்டும் வகையில் ஆங்காங்கே அள்ளித் தெளித்து ஒரு அற்புதமான எட்டாவது புத்தகத்தை எண்ணற்ற தகவல்களோடு படைத்தளித்திருக்கிறார் ஆசிரியர்.