புத்தக அறிமுகம் | தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கை தேர்வும் |
முதற்பதிப்பு | ஜூன் 2016 |
விலை | ரூ. 130 |
வெளியீடு | விகடன் பிரசுரம் |
மொத்த பக்கங்கள் | 214 |
சமர்ப்பணம் | எல்லோருக்கும், யாதுருக்கும், யாவரும் கேளிருக்கும், எவ்வுயிர்க்கும் |
படிப்பு, விளையாட்டு இரண்டையும் இரு கண்களாய் பாவித்து இயற்கையை நேசித்து அறிவியலை ஆராய்ந்து வாழ்வின் அன்றைய பொழுதுகளை அழகாய் இரசித்து வாழும் ஆசிரியர் அவரது அனுபவங்களோடு கற்பனைகளையும் கலந்து படைத்திருக்கும் இந்த இரண்டு டஜன் கட்டுரைகளை படிக்கும்போது தேர்வில் வெற்றி பெற மட்டுமல்ல வாழ்க்கையை அழகாய் வாழவும் கற்றுக்கொள்ளலாம். இதில் நேரடியான அறிவுரைகள் எதுவும் தரப்படவில்லை, எனினும் இக்கட்டுரைகளை படிக்கும் பொழுது அதிகாலையில் எழுந்து இந்த அற்புதமான வாழ்வினை இரசித்திடும் ஆர்வம் வருகிறது.
அஃக்றிணைப் பொருளான மேஜையைப் பார்த்தாலும் அழகாய் புன்னகைத்திடுவோம் மேஜை கட்டுரையை படித்த பின்னே. நுனிப்புல் மெய்வது போல படிக்க கூடாது என்று பள்ளியில் ஆசிரியர் திட்டக் கேட்டிருப்போம். ஆனால் நுனிப்புல்லாலும் சில சகாப்தங்கள் உருவாகலாம் என உணரவைக்கிறார் ஆசிரியர்.
எப்படிப்பட்டவர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவை கதையோடு வாழ்வின் எதார்த்தங்களை எளிமையாய் புரிய வைத்திருக்கிறார் "யதார்த்தத்தில்". உடலுக்கு மட்டும் அல்ல உள்ளத்திற்கும் ஒப்பனை செய்து கொண்டால் வாழ்வு அழகாக இருக்கும் என்பதை அறிய – "ஒப்பனை"
கால்பந்தும் காலபந்தும்" – ஒரு விறுவிறுப்பான சுவாரஸ்யமான கால்பந்து மேட்சை இப்புத்தகத்தின் வழியே பார்த்து (படித்து) மகிழலாம். கால்பந்தாட்டம் பற்றி தெரியாதவர்களும் கற்றுக்கொள்ளலாம். மனசுக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் மனதில் வைத்து எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் வலம் வரச்செய்கிறது – "சிரிப்பு"
"சலனமற்ற சந்தோஷங்கள்" – மனதின் சலனங்களைப் போக்கி சந்தோஷமாக வாழ்ந்திட தேவையான அற்புதமான பொன்மொழிகளையும் ஆழமான கருத்துக்களையும் தன்னுள் கொண்டுள்ளது. தவறாமல் படியுங்கள்.
அப்பா அடித்த பசுமரத்தாணிகளை படிக்கையில் பல பசுமரத்தாணிகள் பசுமையாய் நினைவில் வருகின்றன. மொத்தத்தில் ஆசிரியரால் ஆசையாய் படைக்கப்பட்டு அளிக்கப்பட்ட விருந்து அறுசுவையும் நிறைந்த அற்புதம்.