Books

பொய்க் கடிகாரம்

புத்தக அறிமுகம்

:

பொய்க் கடிகாரம்

முதற்பதிப்பு

:

ஜூலை 2018

விலை

:

ரூ 135

வெளியீடு

:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

மொத்த பக்கங்கள்

:

163

 

       பொய்க்கடிகாரத்தின் முப்பது கட்டுரைகளும் வாழ்வின் மெய்களை இயல்பாக இனிமையாக எடுத்துரைக்கின்றன. பார்க்கும் இடத்திலெல்லாம் “உன்னைப்போல் பாவை தெரியுதடி” என்ற பாரதியின் வரியோடு, தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன் பார்க்கும்போது பார்க்கின்ற ஒவ்வொரு பொருளிலும் புது புது அர்த்தங்களை கற்றுக்கொள்ளலாம் என்று அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறார் ஆசிரியர். எல்லோரும் கேள்விக்கான பதிலை தேடிக்கொண்டிருக்கையில் ஆசிரியர் பதிலுக்கான கேள்விகளைத் தேடி வெற்றியின் இரகசியங்களை புரிவைத்திருக்கிறார். ஆசிரியரின் வர்ணனையில் நாமும் பஞ்சப்பள்ளியின் இயற்கை அழகை மனக்கண்ணால் இரசித்து மகிழலாம்.

       எல்லாம் எவன் செயல் என்ற அத்தியாயத்தில் பாரதியார், திருவள்ளுவர், திருமூலர், மாணிக்கவாசகர், இரமண மகரிஷி போன்ற அற்புதமான மனிதர்களின் துணையோடு தியானத்தின் அவசியத்தை ஆழ்மனதில் பதிய வைக்கிறார் ஆசிரியர்.

       திரைபடங்கள் தீ மாதிரி, சமையலும் செய்யலாம், அச்சப்படவும் வைக்கலாம் என்ற ஆசிரியர், இன்ஸெப்சன், அழகான மனது, பேட்மென் பிகின்ஸ், கேஸ்ட் அவே,catch me if u can, என்ற ஆங்கில திரைபடங்கள் வழியாகவும் ஹாலிவுட் நடிகை ஆர்டுரேஹெர்ப்பன் மூலமாகவும் அறிவியலையும், மன நோய்களையும், உளவியிலையும், வாழ்வின் தத்துவங்களையும் எளிமையாக புரிய வைத்திருக்கிறார்.

       பவளமல்லி மரத்தின் பின்னால் உள்ள காதல் கதையை கண்டுணரலாம். எகிப்து அரசி கிளியோபட்ராவின் அழகின் இரகசியத்தையும் ரேகி மருத்துவத்தின் ஆற்றலையும் சந்திப்பில் சந்திக்கலாம். கால்பந்தாட்டமும், கால்நடை மருத்துவமும் கவனத்தை ஈர்க்கின்றன.

       நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நச்சென்று நான்கு வழிகள், தெரிந்து கொள்ள  வாருங்கள் பக்கம் 95 ற்கு. நம் மேனி தங்க ரதம் போல பளபளக்க அங்கரதம் அத்தியாயத்தை ஒரு முறை அலசிப் பார்க்கலாம். செல்லிடத் தொலைபேசியின் தொடுதிரையில் புதைந்துள்ள அறவியல் ஆச்சரியங்களை ஞாபகசுவட்டில் சுவைத்து மகிழலாம்.

       நம் மரபணுவில் உள்ள ஜீன் DRD4/7r யும், ஜீனின் செயல்பாடுகளையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட நம் எண்ணத்தின் வலிமையையும் ஜூனுக்கு தீனியில் அறியலாம். இதயம் துடிப்பது இசை லயத்தில் அல்லவா, இன்னும் பல இசை சுவாரஸ்யங்களுடன் –“மாயமாளவகெளள”. அவசியமில்லா மின்வெட்டு அவசியமான சொல்வெட்டு பக்கம் 155 இல்.

பல்சுவை விருந்தளிக்கும் இப்புத்தகத்தைப் பற்றி தற்செயலாய் தெரிந்துகொண்டாலும் தவறாமல் படிக்கலாம். பட்டாம்பூச்சியின் விளைவு போல வாழ்வில் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே என்பதை உணர வைக்கிறார் ஆசிரியர்.